திருடிய கடைக்கு தீ வைப்பு ,கேமராக்கள் உடைப்பு - திருடர்கள் அட்டகாசம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெனரல் ஸ்டோரின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூ.6 ஆயிரம் பணத்தை திருடி விட்டு, கடைக்கு தீ வைத்து சென்றனர். இதில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த அரசபோத்தி இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் கைகாட்டி கோயில் பஜாரில் ஸ்டேஷனரி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு, வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை 3 மணிக்கு இவரது கடை தீப்பிடித்து எரிவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடையில் சென்று பார்த்த போது, பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தும், கடையின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்து கிடந்தது.

கடையில் இருந்த கல்லா பெட்டி எதிரே இருந்த கால்வாயில் கிடந்தது. அதில் இருந்த பணம் ரூ.6 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த 3 சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.கடையில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இருவர் அப்பகுதியில் உள்ள தெருக்களில் இரவு 12:30 மணிக்கு மேல் இரு இளைஞர்கள் வலம் வருவதும் கேமராக்களை சேதப்படுத்துவதும் பதிவாகியுள்ளது. கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியை தூக்கி செல்வதும், சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து ஏரிவதும் பதிவாகி உள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story