ஆசிரியை கொலை வழக்கு - ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை நிறைவு
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே முருக்கன்குடி வனப்பகுதியில் கடந்த 2023 நவம்பர் மாதம் 15ம் தேதி நிகழ்ந்த வி.களத்தூர் அரசுப்பள்ளி ஆசிரியை தீபா கொலை செய்யப்பட்ட வழக்கில், 85 நாட்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 10ம் தேதி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியரான வெங்கடேசனை, விசாரிக்க வேண்டு மென நான்கு நாட்கள் போலீஸ் கஷ்டடி கேட்டு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதி மன்றத்தில் வி.களத்தூர் போலீசார் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
போலீசாரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கடந்த 15ம் தேதியிலிருந்து ஆசிரியர் வெங்கடேசனுக்கு நான்கு நாட்கள் போலீஸ் கஷ்டடி வழங்கியது. இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்த வெங்கடேசனை வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் போலீசார் . விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். இதில் ஆசிரியர் தீபா, ஆத்திரமூட்டும் வகையில் பேசியதால் அவரை கோபத்தில் கொலை செய்ததாக கண்ணீர் மல்க போலீசாரிடம் வெங்கடேசன்தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர் தீபாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வெங்கடேசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொலை நிகழ்ந்த இடம், மற்றும் சடலத்தை எரித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, ட்ரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தியதில் எலும்புகள் சிலவற்றை சேகரித்த, போலீசார் அதனை தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடி முடிந்ததை தொடர்ந்து, பிப்ரவரி - 19ம் தேதி வெங்கடேசனை போலீசார் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிழ நீதிமன்ற நீதிபதி சங்கீதா சேகர் முன் ஆஜர் படுத்தி அவர் போலீஸ் கஸ்டடியில் தெரிவித்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து வெங்கடேசனை வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து வெங்கடேசனை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.