தப்பியோட முயன்ற குற்றவாளி - சுட்டு பிடித்த போலீஸ்

தப்பியோட முயன்ற குற்றவாளி - சுட்டு பிடித்த போலீஸ்

உதயபிரகாஷ் 

விக்கிரவாண்டி அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு, தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாகிக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சென்னை மாதவரம் திருமலைநகரைச் சேர்ந்த புருஷோத்தமன் மகன் ரமேஷ் (21). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் பவித்ரா (20). சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடையில் பணியாற்றி வந்தார். காதலர்களான இவர்கள் இருவரும் கடந்த 23-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்காக சென்னையிலிருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் பகுதிக்கு 24-ஆம் தேதி அதிகாலை வந்த போது, பின்னால் பைக்கில் வந்த இருவர், பவித்ராவின் கைப்பேசியைப் பறித்துத் தப்பினர். சிறிது தொலைவுக்குப் பின்னர் சென்ற அவர்கள் இருவரும் அப்பகுதியில் மறைந்து காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ரமேஷை தாக்கிவிட்டு, பவித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றனர். தொடர்ந்து இருவரிடம் தப்பிய பவித்ரா, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய போது சென்னை நோக்கிச் சென்ற அதிமுக பிரமுகரின் கார் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே பவித்ரா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில் விபத்தை ஏற்படுத்தியது சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பாஸ்கர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் கிடைத்த விசாரணையில், பவித்ராவிடம் கைப்பேசியை பறித்து அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது திருநெல்வேலி மாவட்டம், கொல்லியங்குளத்தைச் சேர்ந்த சந்திரபெருமாள் மகன் உதயபிரகாஷ் (25), பனங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையிலான நான்குத் தனிப்படை போலீஸார் திருநெல்வேலிக்குச் சென்று இருவரையும் கைது செய்து விழுப்புரம் மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையின் போது பவித்ராவிடமிருந்து பறித்த கைப்பேசியை விக்கிரவாண்டி வட்டம், கப்பியாம்புலியூர் ஏரிக்கரையிலுள்ள புதர் ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாக உதயபிரகாஷ் தெரிவித்தார்.

இதையடுத்து ஒலக்கூர் காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன், தலைமைக் காவலர் தீபன்குமார் ஆகியோர் உதயபிரகாஷை புதன்கிழமை மாலை கப்பியாம்புலியூர் ஏரிக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குபுதரில் கைப்பேசியுடன் கத்தியையும் உதயபிரகாஷ் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கத்தியை எடுத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன், தலைமைக் காவலர் தீபன்குமார் ஆகியோரது இடதுகை புஜத்தில் கத்தியால் உதயபிரகாஷ் வெட்டினார். இதையறிந்த காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்துள்ளார். ஆனால் உதயபிரகாஷ் மீண்டும் தாக்க முயன்றதால்,அவரது வலது முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டு கைது செய்தார்.

இதைத் தொடர்ந்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன், தலைமைக் காவலர் தீபன்குமார் மற்றும் உதயபிரகாஷ் ஆகிய மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.தீபக் சிவாச் மருத்துவமனைக்கு விரைந்து, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் சம்பவம் குறித்தும், உடல்நலம் குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

இருவர் மீதும் நிலுவை வழக்குகள் : இந்த வழக்கில் போலீஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட உதயபிரகாஷ் மீது திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலையத்தில் ஆதாயக் கொலை, பொது அமைதிக்கு பங்கும் விளைவித்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோல 17 வயது சிறுவன் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த இருவரும் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டது. அதனடிப்படையில் இருவரும் சேர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story