பிரேக்கப் செய்த காதலி கை, கால்களை கட்டி எரித்து கொடூர கொலை - திருநம்பி சொன்ன கதையால் அதிர்ந்த போலீசார்

பிரேக்கப் செய்த காதலி கை, கால்களை கட்டி எரித்து கொடூர கொலை - திருநம்பி சொன்ன கதையால் அதிர்ந்த போலீசார்

Culprit and murdered

சென்னை அருகே முழுமையாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, உடலை கத்தியால் கிழித்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தது, அவரது காதலரான திருநம்பி என்பது போலீசாரை அதிர வைத்துள்ளது. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் கேளம்பாக்கம் அருகே இருக்கும் பொன்மார் பகுதியில் தீயில் எரிந்து கொண்டிருக்கும் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக சத்தம் கேட்ட பகுதிக்கு அங்கிருந்த சிலர் ஓடி சென்றுள்ளனர். அப்போது கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் தீயில் எரிந்து கொண்டிருந்தது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். உயிருக்கு போராடிய அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது தனக்கு தெரிந்த வெற்றிமாறன் என்பவரது பெயரையும், அவரது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போதே அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதற்குள் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இறப்பதற்கு முன்பு அவர் கொடுத்த அந்த வெற்றிமாறனை தொடர்பு கொண்டு அழைத்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இறந்தவர் நந்தினி என்பதும், அவர் கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கி பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

உயிரிழந்த பெண் எரிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்த போது அவர்களின் கவனம், வெற்றிமாறன் மீது திரும்பியது. தொடர் விசாரணையில் வெற்றிமாறன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது சந்தேகப்பட்டு கடுமையாக விசாரிக்க தொடங்கினர். அதில், வெற்றிமாறனும், நந்தினியும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இருவரும் மதுரையில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், வெற்றிமாறன் பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ளார். வெற்றிமாறன் என தனது பெயரை மாற்றி கொண்டு திருநம்பியாக வலம் வந்த அவர் நந்தியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். தான் ஒரு திருநம்பி என்பதையும் மறைத்துள்ளார். இது குறித்து நந்தினிக்கு தெரிய வந்ததால் வெற்றிமாறனை விட்டு விலக தொடங்கியுள்ளார். இதற்கிடையே நந்தினி ராகுல் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி நந்தினிக்கு பிறந்த நாள் என்பதால், அவரை சந்திக்க வந்த வெற்றிமாறன் கோவில், முதியோர் இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், மேடவாக்கம் செல்லும் சாலையில் நந்தினியை அழைத்து சென்ற வெற்றிமாறன், அவருக்கு பிறந்தநாள் சர்பிரைஸ் தருவதாக கூறி நந்தியின் கை, கால்களை கட்டியுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கை, கால், கழுத்து பகுதிகளில் நந்தினியை அறுத்த வெற்றிமாறன், அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். நந்தினி அலறவும், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தை கேட்ட போலீசார் அதிர்ந்ததுடன், காதலியை கொலை செய்தது திருநம்பி என தெரிய வந்தது. திருநம்பி என தெரிந்ததால் தன்னை விட்டு விலகிய காதலியை நைசாக அழைத்து பேசி, பிறந்த நாள் சர்பிரைஸ் தருவதாக கூறி கொலை செய்த திருநம்பியை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story