மோதிரத்தை அடமானம் வைத்து மது அருந்திய தந்தை - ஆத்திரத்தில் கொலை செய்த மகன் !!
கொலை
தங்க மோதிரத்தை அடமானம் வைத்து, அந்த பணத்தில் மது அருந்திய தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் விசாரனையில் தெரிய வந்த உண்மை : சென்னை மேற்கு மாம்பலம் விநாயகம் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). கார் ஓட்டுநராக பணி செய்துவந்தார். இவருக்கு மனைவியும், மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் நர்சிங் படித்து வருகிறார். மகன் சுனில்குமார் (19) உணவு விநியோக ஊழியராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். வெங்கடேஷ் மது போதைக்கு அடிமையானவர் என கூறப் படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை அடமானம் வைத்து, மது அருந்தி வீட்டுக்கு வந்த நிலையில் இதை மகன் சுனில்குமார் மோதி ரத்தை எங்கே அடமானம் வைத்துள்ளீர்கள்? என்று கேட்க அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது.
ஆத்திரம் அடைந்த சுனில்குமார், அருகில் கிடந்த பிளாஸ்டிக் பைப்பால் தந்தையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், சுருண்டு விழுந்த வெங்கடேஷ் அங்கேயே இறந்து விட்டார்.
இந்த நிலையில் குடும்பத்தினர், சுனில் குமார் கொலை வழக்கில் கைதாவதைத் தடுக்கும் வகையில் மது போதையில் வெங்கடேஷ் தவறி விழுந்து இறந்துவிட்டதாக அசோக் நகர் போலீஸுக்கு அவர்களே புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அசோக்நகர் போலீஸார் விசாரித்தனர். முதல் கட்டமாக வெங்கடேஷ் உடல் அரசு மருத்துவமனை யில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகே வெங்கடேஷ் கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சுனில் குமாரை கைது செய்தனர்.