டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேருக்கு 2 ஆண்டு சிறை.
பைல் படம்
சென்னை, எண்ணுார் கத்திவாக்கத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், திருவள்ளூரைச் சேர்ந்த குணசீலன், 50, என்பவர் மேற்பார்வையாளராகவும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பிரபு, 39, சுந்தர், 46, கிருஷ்ணமூர்த்தி, 48, ஆகிய மூவர் விற்பனையாளர்களாகவும், கடந்த 2009 முதல் 2012 வரை பணியாற்றினர். இந்த காலத்தில் மதுபானம் விற்ற பணம் 30.15 லட்சம் ரூபாயை, நான்கு பேரும் கையாடல் செய்ததாக, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று பிறப்பித்த தீர்ப்பு: நான்கு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நான்கு பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 30.15 லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். பணம் கட்ட தவறினால், மேலும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு, மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.