திருப்பூர் : கோடிக்கணக்கில் மோசடி - மும்பையை சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூரில் நூல் மற்றும் துணிகளை பெற்று ரூ.5.40 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றிய மும்பை சேர்ந்த மூன்று பேரை திருப்பூர் மாநகர மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டன் சொக்கானி. ஓம் சக்தி கோவில் பகுதியில் நூல் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்த பங்கஜ் அகர்வால் , அங்குஷ் சிட்லாங்கியா , ராகுல் குமார் சர்மா ஆகியோர் கடந்த ஆண்டு சேட்டன் சொக்கணியிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மும்பையில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும் , தங்களுக்கு நூல் மற்றும் துணிகள் தேவைப்படுவதாகவும் நல்ல விலை தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கு நூல் மற்றும் துணிகளை பெற்றுக் கொண்டு நான்கு கோடியே 64 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

மீதம் பணத்தை கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சேட்டன் சொக்கானி முவரும் அளித்த நிறுவனங்களின் முகவரிக்குச் சென்று பார்த்தபோது மூவரும் தலைமறைவானது தெரிய வந்தது. இது தொடர்பாக சேட்டன் சொக்கானி மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மூவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் மூவரின் செல்ஃபோன் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்ததில் மூவரும் மும்பையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த எட்டாம் தேதி மும்பை சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த மூன்று பேரையும் கைது செய்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அனுமதி பெற்று திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story