விழுப்புரம்: குட்கா விற்பனை - 40 பேர் கைது, 10 கடைகளுக்கு சீல்
மாவட்ட காவல் அலுவலகம்
விழுப்புரம்: குட்கா விற்பனை - 40 பேர் கைது, 10 கடைகளுக்கு சீல் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும், குறிப்பாக பள்ளி - கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார், மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக விழுப்புரம் அருகே வளவனூரை சேர்ந்த சிவகுருநாதன் (56), ராமலிங்கம் (45), அப்துல்லா (43), கோலியனூர் குமரேசன் (33), விழுப்புரம் கைவல்லியர் தெருவை சேர்ந்த கோபி (48), கே.கே.சாலையை சேர்ந்த சரவணன் (49), மரக்காணம் பழனி (55), பாலா (41), மேல்மலைய னூர் அருகே கொடுக்கன்குப்பம் வேடி (46), சங்கிலிகுப்பம் ராஜா (33), திண்டிவனம் அருகே மானூரை சேர்ந்த பிரவீன் (22), வானூர் அருகே இடையன்சாவடியை சேர்ந்த ராஜேந்திரன் (47) உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர், இவர்களிடம் இருந்து 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விழுப்புரம், கோட்டக்குப்பம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 10 பெட்டிக்கடை களை போலீசாரின் பரிந்துரைப்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.