ஓட்டத்தட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது
கோப்பு படம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஓட்டத்தட்டை பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் வினிதா வயது 22. இவருக்கு 17 வயதாக இருக்கும் போது கடந்த 2018 ல் அதே பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் உதயகுமார் தன்னை காதலித்தும், திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியும் உடலுறவு கொண்டுள்ளார்.
இதனால் வினிதா கர்ப்பமான நிலையில் தன்னை திருமணம் செய்ய சொல்லி உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதற்கு உதயகுமார் மறுப்பு தெரிவித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வினிதாவிற்கு கடந்த 2019 ல் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
அதன் பிறகும் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய உதயகுமார் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போக்சோ வழக்கு பதிவு செய்து உதயகுமாரை தேடிவந்தனர். இந்த நிலையில் உதயகுமாரை அவரது பெற்றோர்கள் உறவினர்கள் வீட்டில் மறைத்து வைத்து அப்படியே வெளிநாடு வேலைக்கு அனுப்பி தப்பிக்க வைத்துள்ளனர். போலீசார் மற்றும் பெண் வீட்டார் கேட்ட போது மகன் இறந்து விட்டதாக நாடகம் ஆடி உள்ளனர்.
இந்த நிலையில் உதயகுமார் மலேசிய நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வருவது மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் மூலமாக தெரிய வந்துள்ளது. மகன் உயிரோடு இருப்பதை பெண் வீட்டார் கண்டிப்பிடித்து விட்டதால் வழக்கை வாபஸ் வாங்க கூறி வினிதாவை தினந்தோறும் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வினிதா தனது 4 வயது மகனுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் கிடம் புகார் அளித்தார். வழக்கை வாபஸ் வாங்க வில்லை என்றால் உன்னையும், உன் மகனையும் கொன்று விடுவதாக உதயகுமாரின் தந்தை முருகையன், சகோதரர் அருள்தாஸ் மற்றும் அவரது உறவினர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டில் தப்பியோடிய உதயகுமாரை கைது செய்தும் தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளார்