கண்கள் அடிக்கடி துடிக்கிறதா? இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கலாம்!!
கண்கள் அடிக்கடி துடிப்பு
“எனக்கு காலைல இருந்து வலது கண் துடிச்சிக்கிட்டே இருக்கு..” என்று யாரேனும் கூறினால், “உனக்கு அப்போ நல்லது நடக்கப்போகுதுன்னு அர்த்தம்..” என்று பலர் கூற கேட்டிருப்போம். அதற்கு ஒரு தெய்வீக காரணத்தையோ அல்லது மூட நம்பிக்கையையோ கூறி, நம்மை நம்ப வைத்திருக்கின்றனர். கண் துடிப்பதை ஆங்கிலத்தில் Eye Twitching என்று கூறுவர். சோர்வு, கண் வலி போன்ற பல காரணிகள், கண் துடிப்பிற்கு காரணமாக அமையலாம். சில சமயங்களில் தூக்கம் இல்லை என்றால் கூட, கண் துடிக்கலாம். கண் துடிப்பதிலேயே பல வகைகள் இருக்கின்றன. கண்களினாலும் கண் துடிப்பு ஏற்படலாம், ஒரு சில சந்தர்ப்பங்களில் நரம்பு அல்லது முகத்தசைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாகவும் கண் துடிக்கலாம்.
மயோக்கிமியா: மயோக்கிமியா என்பது பலர் மத்தியில் அறியப்படும் குறைபாடாகும். தூக்கமின்மை, சோர்வு, அதிகமாக கஃபைன் எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றால் இந்த குறைபாடு ஏற்படலாம். கண் இமை பிடிப்புகள்: நம் உடல் தசைகளில் எப்படி எப்போதாவது பிடிப்பு அல்லது அழுத்தம் ஏற்படுகிறதோ, அதே போல கண் இமைகளிலும் ஏற்படலாம். இதில், இரு வகை இருக்கின்றன. முதல் வகை கண்கள் காய்ந்து போவதனாலும், மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் ஏற்படுகிறது. இது நரம்பு பிரச்சனை தொடர்பானதாகவும் இருக்கலாம். கண் இமைப்பு பிடிப்புகளின் இரண்டாவது காரணம் கை-கால் வலிப்பு நோய் காரணமாக (அரிய வகை) இருக்கலாம். ஒரு சில சந்தர்ப்பங்களில் இது பார்கின்சன்ஸ் நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
Fasciculations: இவை பல்வேறு காரணங்களினால் உருவாகலாம். அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதாலோ, உடலுக்கு அதிக உழைப்பு கொடுத்தாலோ இது ஏற்படும். கண் துடிப்பு எப்போதெல்லாம் ஏற்படலாம்? சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் ஏற்படலாம். கண்களுக்கு அதிக வேலை கொடுத்தால் ஏற்படலாம். அதிகம் வெளிச்சம் நிறைந்த இடத்தில் இருந்தால் ஏற்படலாம். உடலுக்கு அதிக உழைப்பு கொடுக்கும் சமயங்களில் ஏற்படலாம். இதை தடுப்பது எப்படி? கண்டிப்பாக நிறைவான தூக்கம். அந்த உறக்கம் 7-8 மணி நேரம் வரை இருக்க வேண்டும். சரியான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக கண்களுக்கு நன்மை பயக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைக்க வழிகளை தேட வேண்டும்.