இன்று பூமிக்குப் புறப்படும் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள்!!

இன்று பூமிக்குப் புறப்படும் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள்!!
X

subhanshu shukla

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை முடித்துவிட்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்ஸியம் 4 திட்டக்குழு வீரர்கள் இன்று பூமிக்கு திரும்ப உள்ளனர்.

இஸ்ரோ, நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் - 4’ திட்டத்தை முன்னெடுத்தன. அதன்படி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா , முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள், கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட்டில் ஜூன் 25ம்தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு விண்ணில் பாய்ந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம், 28 மணி நேரம் சுற்றுப்பாதையில் பயணித்து ஜூன் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஏ.ஆர் ரஹ்மானின் பாடலை கேட்டபடி பயணத்தை தொடங்கிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்’ என்று முழக்கமிட்டார். ஆக்ஸியம் - 4 குழுவில் உள்ள நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்ற்கொண்டனர். நால்வரும் சுமார் 60 ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படட்டிருந்தது. அதன்படி நுண் ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. விண்வெளியில் இருந்த தங்களின் அனுபவங்கள் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நாசா வீரர் பெக்கி விட்சன், “ எங்கள் கடைசி சில நாட்களை நீரேற்றம் செய்யப்பட்ட இறால் உணவுகள் உண்டு மகிழ்ந்து, நண்பர்களுடன் நன்றாக அனுபவித்தோம். அத்துடன் சுபான்ஷு இந்தியாவில் இருந்து கேரட் அல்வா, மாம்பழ ஜுஸ் கொண்டு வந்திருந்தார்.” என்று குறிப்பிட்டிருந்த அவர், சக விண்வெளி வீரர்களுடன் உணவருந்தும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஜூலை 14ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை (ஜூலை 15ம் தேதி) மாலை 3 மணியளவில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் பூமியை வந்தடைவார்கள் என நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story