டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!!

GST
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார். இந்தநிலையில், செப்.3, 4 ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி கணிசமாக குறைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜவுளி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணி மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது.இந்நிலையில், ஜி.எஸ்.டி., வரி அடுக்குகளை குறைக்கும் மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி இனி, 5 சதவீத மற்றும் 18 சதவீத அடுக்குகள் மட்டுமே இருக்கும். 12 சதவீத மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்படும். புகையிலை, மதுபானங்கள் உள்ளிட்ட ஏழு பொருட்களுக்கு விதிக்கப்படும் பாவ வரி, 40 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை குறைப்பதற்கான புதிய திட்டத்தின்படி, தற்போது 12 சதவீத வரி விகிதத்தில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரி விகிதத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது. அதே போல், தற்போது 28 சதவீத வரி விகிதத்தில் இருக்கும் 90 சதவீத பொருட்கள் இனி, 18 சதவீத வரி விகிதத்திற்கு மாற்றப்படும். இந்த வரி குறைப்பால், நுகர்வு 1.93 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, உற்பத்தி துறை வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர்களின் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு 9,700 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
