நீட் தேர்வை ஒழிக்கனும்.. மம்தா பானர்ஜி கடிதம் !
மம்தா பானர்ஜி
நாடு முழுவதும் மே 5ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி, 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் பிரச்னையாக உருவெடுத்தது.
நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசும் மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நீட் தேர்வு முறைகேடுகள் அம்பலமாகிவிட்ட நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகளும் நீட் தேர்வு முறையே ரத்து செய்ய குரல் கொடுத்து வருகின்றன. இந்த வரிசையில் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்கக்கோரி பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் இன்று (ஜூன் 24) எழுதியுள்ள கடிதத்தில், ”தற்போதைய நீட் தேர்வு நடைமுறை, பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் நலனை மனதில்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது.
மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இது மாணவர்களின் இயல்புநிலை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். 2017ஆம் ஆண்டுக்கு முன்பு மாநிலங்களே சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு ரூ.50லட்சம் செலவு செய்வதால், மாநிலங்களே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.