இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்திற்கு அஸ்வின் பதிலடி..!
அஸ்வின் பதிலடி..!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடர் இந்திய அணிக்கு சிறப்பானதாகவே அமைந்தது. ஏனெனில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. மேலும் கடைசியாக நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் சமன் செய்தது.
குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்தியா, அதன்பின் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 13 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்தது.
முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தபோது ஏராளமான திறமைகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இந்தியா திகழ்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது பின்வருமாறு;- "உலகிலேயே இந்தியா குறைந்த சாதனை வெற்றிகளை பெறும் அணியாக இருப்பதாக முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருந்தார். ஆம் நாங்கள் கடந்த பல வருடங்களாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இருப்பினும் நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை பவர் ஹவுஸ் என்று சொல்லிக் கொள்கிறோம்.
உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றிகளை பெறுவதில் நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். நாங்கள் பல மகத்தான வெற்றிகளை கண்டுள்ளோம். மைக்கேல் வாகன் அப்படி சொன்ன பின் இந்தியா குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இருக்கிறதா என்பதை பற்றி எங்களுடைய நாட்டிலேயே நிறைய வல்லுநர்கள் பேசத் துவங்கியுள்ளனர். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் அதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.