2023 Highlights: பிரியாணி முதல் காண்டம் வரை...ஸ்விகியை வாய்ப்பிளக்க வைத்த ஆன்லைன் ஆர்டர்கள்!
Briyani
இன்னும் 10 நாட்களில் 2023ம் ஆண்டு முடிய உள்ளது. இந்த ஆண்டில் மறக்க முடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்றாக இந்தியாவில் அதிகமாக மக்களால் விரும்பி சாப்பிடும் பிரியாணி உணவு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி இந்தியாவின் உணவு இல்லை என்றாலும், அதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. திருமணமானாலும் சரி, விழாவானாலும் சரி அனைத்து கொண்டாட்டத்திலும் பிரியாணி தான் ஃப்ர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும்.
அந்த வகையில், 2023ம் ஆண்டு ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனத்திற்கு அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யபப்ட்டுள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் மும்பையில் ரூ.42.3 லட்சத்திற்கு பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். இந்தியாவில் கிரிக்கெட் உலக கோப்பை நடந்ததால் அதன் கொண்டாட்டமாக அதிகளவில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மும்பை மட்டுமில்லாமல் ஐதரபாத், டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் தலா பத்தாயிரத்துக்கும் அதிகமாக ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடப்பட்டதால் வடமாநிலங்களில் 7.7 மில்லியன் குலோப் ஜாமூன்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நவராத்திரி பூஜையின் போது அதிகளவில் மசாலா தோசை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். ஐதரபாத்தில் மட்டும் ரூ.6 லட்சத்துக்கு இட்லி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 8.5 மில்லியன் சாக்லேட் கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் என மில்லியன் கணக்கில் ஆர்டர்கள் குவிந்துள்ளன. காதலர் தினத்தில் நாக்பூரை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விகி கூறியுள்ளது.
சாப்பிடும் உணவில் இருந்து அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் ஆன்லைனில் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி ஆர்டர் செய்து கொள்கின்றனர். பண்டிகை மற்றும் கிரிக்கெட் போன்ற கொண்டாட்டங்களில் உணவுகள் ஆர்டர் செய்தாலும், அதில் பிரியாணியே முதலிடம் பிடித்து கெத்து காட்டுகிறது.
இதேபோல் கடந்த நவம்பர் மாதம் ஸ்விகி இன்ஸ்டாமார்டில் பெங்களூரு மக்கள் அதிகமாக மாம்பழத்தை ஆர்டர் செய்துள்ளனர். மே 21ம் தேதி 36 டன் மாம்பழங்களும், ஜூலை 30ம் தேதி 61 டன் வெங்காயமும், அக்டோபர் 2ம் தேதி 82 டன் தக்காளியும், ஆகஸ்ட் 12ம் தேதி 5,893 காண்டமும் விற்பனையாகியுள்ளதாக ஸ்விகி இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது.