கடந்த நிதியாண்டில் ரூ.4,340 கோடி வருமானத்துடன் பா.ஜ.க. முதலிடம்!!

பாஜக
தேசிய அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கட்சிகளின், வரவு, செலவு விவரம் இடம்பெற்றுள்ளது. மேலும் அறிக்கையில், கடந்த 2023-2024 நிதியாண்டில், பா.ஜ.க.வின் மொத்த வருமானம் ரூ.4 ஆயிரத்து 340 கோடியே 47 லட்சம். இது, 6 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 74 சதவீதம் ஆகும். இத்தொகையில், 50.96 சதவீதம் மட்டும், அதாவது ரூ.2 ஆயிரத்து 211 கோடியே 69 லட்சம் மட்டும் பா.ஜ.க. செலவழித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,225 கோடியே 12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதில், 83 சதவீத தொகையான ரூ.1,025 கோடியே 25 லட்சத்தை காங்கிரஸ் கட்சி செலவழித்துள்ளது. அந்த செலவினங்களில், தேர்தல் தொடர்பான செலவுகளுக்கு ரூ.619 கோடியே 67 லட்சமும், நிர்வாகம் மற்றும் பொது செலவுகளுக்கு ரூ.340 கோடியே 70 லட்சமும் காங்கிரஸ் கட்சி செலவிட்டுள்ளது. மேலும், காங்கிரசுக்கு கிடைத்த வருமானங்களில், கூப்பன் விற்பனை மூலம் கிடைத்த ரூ.58 கோடியே 56 லட்சமும் அடங்கும். தேசிய கட்சிகள் பெற்ற வருமானங்களில் பெரும்பகுதி, தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்தவை ஆகும். கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் பத்திரங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டது. இருப்பினும், அதற்கு முன்பு, தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. ரூ.1,685 கோடியே 63 லட்சமும், காங்கிரஸ் கட்சி ரூ.828 கோடியே 36 லட்சமும், ஆம் ஆத்மி ரூ.10 கோடியே 15 லட்சமும் பெற்றுள்ளன. மேற்கண்ட 3 தேசிய கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 524 கோடியே 13 லட்சம் வருவாய் ஈட்டி உள்ளன. இது, அக்கட்சிகளின் மொத்த வருமானத்தில் 43.36 சதவீதம் ஆகும். கடந்த நிதியாண்டில், பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.4 ஆயிரத்து 507 கோடி நன்கொடை பெற்றுள்ளன. அவற்றில், தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை மட்டும் 55 சதவீதம் ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக செலவினங்களுக்கு ரூ.56 கோடியே 29 லட்சமும், ஊழியர்கள் சம்பளத்துக்காக ரூ.47 கோடியே 57 லட்சமும் செலவழித்துள்ளது. கூப்பன் விற்பனை மூலம் ரூ.11 கோடியே 32 லட்சம் வருவாய் பெற்றுள்ளது.