4வது முறையாக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு! அமைச்சராகும் பவன் கல்யாண்!
சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது.
அதாவது சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.
மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறது சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
அமைச்சரவை பட்டியலில் பவன் கல்யாண் பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளது. பவன் கல்யாணுக்கு அடுத்தப்படியாக சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் இடம்பெற்றுள்ளார்.