''காங்கிரஸ் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை'' - பிரதமர் மோடி !
pm modi
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பிக்களுடன் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது என்டிஏ கூட்டணி. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.இந்திய வரலாற்றில் இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி; எங்களின் அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே எங்கள் நோக்கம்.
பாஜக கூட்டணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தை படைக்கும்.
என்டிஏ தலைவராக தேர்வு செய்து புதிய பொறுப்பை வழங்கியது என்னுடைய அதிர்ஷ்டம். தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பா.ஜ.கவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வருங்காலத்திலும் பாஜகவின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.
ஜெகன்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிஷாவில் பாஜக ஆட்சி தொடரும். அடிமட்டத்தில் இருந்து இறங்கி உழைத்ததால்தான் இவ்வளவு வலுவான கூட்டணி சாத்தியமானது.
காற்று கூட உள்நுழைய முடியாத அளவிற்கு கூட்டணிக்குள் ஒற்றுமை இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும். 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தேர்தல் காலங்களில் பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி தான் பெண்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கி இருக்கிறது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு பாஜக தலைமையிலான அரசு எப்போதும் முக்கியத்தும் அளித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மதிப்பார்கள் என நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் காலங்களில் EVM இயந்திரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பிய எதிர்க்கட்சியினர் தற்போது அமைதி காத்து வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கவே ஈவிஎம் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு
இந்தியாவின் ஜனநாயகம் பாதிக்கப்படுவதாக வெளிநாடுகளுக்கு சென்று சிலர் குற்றம் சாட்டினர்.