புதிதாக ஆதார் கோரி விண்ணப்பிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கென புதிய நடைமுறை அமல்!!
Aadhar
இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும். இங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி, தற்சமயம் தரகர்களின் உதவியுடன் ஆதார் அட்டை வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு மாரிமுத்து என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ஆதார் அட்டை பெற்றுத் தந்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 100 பேருக்கு போலியாக அவர் ஆதார் அட்டை பெற்றுத் தந்துள்ளார். இதுபோன்ற புகார்களையடுத்து ஆதார் பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கோரி விண்ணப்பித்தால், அவர்களது மனுக்கள் ஆன்லைன் மூலம் யு.ஐ.டி.ஏ.ஐ. ஒருங்கிணைந்த மையத்திற்குச் செல்லும். ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து விசாரணை நடத்த அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ.க்கள் உண்மை தன்மையை நேரடியாக களஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆதார் சேவை மையத்தை சேர்ந்த அதிகாரி கூறுகையில், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைபவர்கள் முறைகேடாக ஆதார் அட்டை பெறுவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு பிற மாநிலங்களில் ஆதார் அட்டை உள்ளதா? இலங்கை அகதியாக வந்துள்ளாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாசில்தார்கள் விசாரணை நடத்திய பின்னரே ஒப்புதல் அளிப்பார்கள். இதற்காக முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. வருகிற 15-ந்தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.