மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் தவறு இல்லை: கர்நாடக எம்.பி.யின் பேச்சால் வெடித்த சர்ச்சை!!
Govind Karjol
கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், சித்ரதுர்கா தொகுதி எம்.பி.யுமான கோவிந்த் கர்ஜோல், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பள்ளியில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தால் என்ன தவறு? எனப் பேசினார். அவரது பேச்சு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தால் அதில் என்ன தவறு இருக்கிறது?. ஜப்பானில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வது, இதனால் ஆசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம். மாணவர்களுக்கு துடைப்பம் கொடுப்பது குற்றமாக பார்க்கப்படுவதால், துப்புரவு பணியே தரம் தாழ்ந்ததாக மாணவர்கள் கருதுகின்றனர். மாறாக, குழந்தைகளுக்கு தூய்மையைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். இவரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனிடையே பல்வேறு மாநிலங்களில் மாணவர்களை தூய்மை பணிகள் உள்ளிட்ட போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது என வழிநாட்டு நெறிமுறைகள் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.