கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம்: கார்த்திக் சிதம்பரம்
Karti Chidambaram
கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும். அக்கட்சியின் தலைமை அரசுக்கு தலைமைவகிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறி வருகிறார். அவரது கருத்து நியாயமானதுதான். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களால் ஆளுமை செய்த கட்சி. தற்போது அது போன்ற ஆளுமை இல்லாததால் அந்த கட்சி குழப்பத்தில் இருக்கிறது. 1967-ல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது உடனடியாக நடக்காது. நாங்கள் வளர வேண்டும், கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதில் தான் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பிறகுதான் தனித்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம். தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் குற்றங்களை காவல்துறை தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்தக்குற்றங்கள் பள்ளி வளாகம், நீதிமன்ற வளாகம், மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்துள்ளதுதான் கவலையளிக்கிறது. இது குறித்துதான் கேள்வி எழுப்பப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இச்சம்பவங்கள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை கூறுவதில் எந்த கூச்சமும், தயக்கமும் எனக்கு இல்லை. அதானி நிறுவனம் மீது அமெரிக்க அரசின் நீதித்துறை குற்றச்சாட்டு வைத்து வழக்குத் தொடுத்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் திரட்டிய நிதியை இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசும் பிரதமரும் எந்தக்கருத்தையும் கூறவில்லை. இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.