வயநாட்டில் நிலச்சரிவு: மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை!
ராகுல் காந்தி
கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது வலைதளப் பதிவில், ''வயநாடு நிலச்சரிவில் சிக்கி அன்புக்குரியவர்களை இழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளேன். அனைத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை செய்ய முதல்வரிடம் கோரினேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் அளித்துள்ளார்.