போபர்ஸ் வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்; முக்கிய தகவல்களை கேட்டு அமெரிக்காவுக்கு சி.பி.ஐ. கடிதம்!!

போபர்ஸ் வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்; முக்கிய தகவல்களை கேட்டு அமெரிக்காவுக்கு சி.பி.ஐ. கடிதம்!!
X

CBI

போபர்ஸ் வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களை கேட்டு மத்திய அரசு தரப்பில் அமெரிக்க நீதித்துறைக்கு சி.பி.ஐ. சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்கு சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதற்காக போபர்ஸ் நிறுவனத்துடன் ரூ.1436 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையழுத்திடப்பட்டது. போபர்ஸ் ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.64 கோடி அளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் முறைகேட்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்கள் எழுந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. போபர்ஸ் விவகாரத்தின் தாக்கத்தின் காரணமாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் 1999-ம் ஆண்டு போபர்ஸ் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே ராஜீவ்காந்தி 1999-ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் 1999-ம் ஆண்டு முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை செய லாளர் பத்நகர், போபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, இடைத்தரகர் வின்சட்டா, குவாத்ரோச்சி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துஜா சகோதரர்கள் உள்பட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் டெல்லி ஐகோர்ட்டு 2005-ம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. எனினும் இந்த விசாரணை மிகவும் மந்தமாக இருந்தது. இந்நிலையில் போபர்ஸ் வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களை கேட்டு மத்திய அரசு தரப்பில் அமெரிக்க நீதித்துறைக்கு சி.பி.ஐ. சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனமான பேர்பாக்ஸின் தலைவர் மைக்கேல் ஹெர்ஸ்மேன், சுவிடன் ஆயுத உற்பத்தியாளர் ஏ.பி. போபர்ஸ் ஆகியோர் இந்தியாவில் இருந்து பீரங்கி வாங்குவதற்கான ஆர்டரை பெறுவதற்கு செலுத்தியதாக கூறப்படுவது உள்ளிட்ட வழக்கு விபரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் போபர்ஸ் வழக்கு விவகாரம் சூடுபிடிக்கும் நிலை உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags

Next Story