மாதத்திற்கு ஒருமுறைதான் கம்பளி போர்வைகள் துவைக்கப்படும்: ஆர்.டி.ஐ-க்கு அமைச்சகம் அளித்த பதில்!!
train and blanket
குறைந்த கட்டணம், படுக்கை வசதிகள் போன்றவற்றால் இந்திய மக்கள் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். கொஞ்சம் வசதி படைத்தோர் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வார்கள். ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் ஆர்.டி.ஐ. மூலம் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் கேட்டிருந்தது. அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாளிதழ் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் பல்வேறு தூய்மைப் பணியாளர்களிடம் தகவல் கேட்டது. அப்போது நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். ஒருவேளை அதிக துர்நாற்றம் அடித்தால் அல்லது உணவு பொருட்கள் கொட்டினால் துவைக்கப்படும். இல்லையெனில் பயணம் முடிந்த பின்னர் போர்வைகள் மடித்து அந்ததெந்த பெட்டிகளில் சுத்தமாக வைக்கப்படும் என பதில் அளித்தனர். மேலும், கம்பளி போர்வைகள் துவைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்படுவது கிடையாது. பயணிகள் புகார் அளித்தால் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர். அதேவேளையில் தலையணை உறை, வெள்ளை போர்வைகள் ஒவ்வொரு பயணமும் முடிந்த பின்னர் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம், வாஷிங் மெஷின்கள் ரெயில்வேக்கு சொந்தமானது. அதில் பணியும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் என்பத குறிப்பிடத்தக்கது.