தேசிய கல்விக் கொள்கையில் மோடி அரசு உறுதி - தமிழகத்தில் சிலர் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் சாடல் | கிங் நியூஸ் 24x7

தேசிய கல்விக் கொள்கையில் மோடி அரசு உறுதி - தமிழகத்தில் சிலர் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் சாடல் | கிங் நியூஸ் 24x7
X

தேசிய கல்வி கொள்கை 

"தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான், “கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது என்பதை அறிவேன். மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, ஒரு சமமான நிலையை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்துக்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை (NEP) என்பது புதிய லட்சிய பொதுத் தளமாகும். நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய கல்விக் கொள்கையானது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

தமிழர் நாகரிகம், தமிழர் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றை ஊக்குவிக்க நாங்கள் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். தமிழ் நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி என்பதைதான் தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. இந்தியோ அல்லது வேறு எந்த ஒரு மொழியுமோ திணிக்கப்படவில்லை.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அவர்களின் அரசியல் நன்மை என்று வரும்போது, ​​அவர்கள் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் புகழ்கிறார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் (பாஜக) ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டுமே ஆதரிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story