இந்தியாவில் சாலை விபத்துகளில் 3 நிமிடத்துக்கு ஒருவர் பலி!
சாலை விபத்து
இந்தியாவில் 2022ல் சாலை விபத்துகளால் அதிக இறப்புகளை எட்டியுள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகள், இறப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தரவுகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், 2022ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சத்தைத் தாண்டியுள்ளன. நாளொன்றுக்கு சுமார் 462 பேர் என ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
2023ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் நிகழும் விபத்துகள் பாதியாகக் குறைக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சாலை விபத்துகளால் தொடர்ந்து இறப்புகள் அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கடந்த 2021-ஆண்டோடு ஒப்பிடும்போது 2022-ல் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ல் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் சுமார் 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் புதிய சாலைகளை அமைப்பதும், விரிவாக்கம் செய்வதுமாக இருந்தாலும், அதி வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு அதிகரித்துவருது வருந்தத்தக்கத் தகவலாக இருந்து வருகின்றது.