சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான முன்பதிவு முடிந்தது!!
Sabarimala Ayyappan temple
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும் நிலையில், இரவில் மண்டல பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 25-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 26-ந்தேதி 60 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை (ஆன்லைன் புக்கிங்) மூலமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' இருக்காது என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த 2 நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' அப்படையில் 5 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜை முடிவுக்கு வர உள்ள நிலையில், மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும். மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. இந்நிலையில் மகர விளக்கு பூஜை காலத்துக்கான மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முடிந்துவிட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மகர விளக்கு பூஜையையொட்டி ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய 3 நாட்களும் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆனால் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மகரவிளக்கு பூஜை நெருங்கியதும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. சபரிமலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 21-ந்தேதி வரை மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4 லட்சத்து 4 ஆயிரத்து 703 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.