கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல் - டீசல் விலை குறைகிறது!!
பெட்ரோல் , டீசல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய்க்காக ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றை இந்தியா நம்பி உள்ளது. 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 46 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையைவிட மிக குறைவு. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கின்றன. இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 2008-ம் ஆண்டு 147 அமெரிக்க டாலராக இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35 ஆக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 68.56 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. மார்ச் 28-ந்தேதி கச்சா எண்ணெய் விலை 83.69 டாலராக இருந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்துள்ளார்.