உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஆக. 23-ம் தேதி அரசுமுறை பயணமாக உக்ரைன் நாட்டிற்கு செல்கிறார். ரஷ்யா உக்ரைன் போர் ஆண்டுகள் கடந்து நீடித்து வரும் சூழலில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்யா சென்றிருந்தார். அது உக்ரைன் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி உக்ரைன் செல்லும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் நேரடியாக ரஷ்யாவை வலியுறுத்தியபோதிலும் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்தே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, ``போலாந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் மோடி ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் போலந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்தியா - போலாந்து இடையேயான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட 70-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதமரின் இந்த பயணம் அமைய உள்ளது. மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 23 ஆம் உக்ரைனுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் 30 ஆண்டுகளுக்கும் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.