வயநாடு இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி!!

வயநாடு இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி!!

priyanka gandhi 

வயநாடு தொகுதியில் காங். சார்பில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல வயநாடு தொகுதியில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று இருந்தார். அந்த தொகுதியில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் தற்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா சார்பில் நவ்யா அரிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி நேற்று கேரளா வந்தார். அவர் மைசூருவில் இருந்து கார் மூலமாக வந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தலைவரான சோனியா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் வந்தார்கள். அவர்கள் சுப்தான் பத்தேரி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இரவில் தங்கினர். வயநாடு வரும் வழியில் பிரியங்கா காந்தி அவரை வரவேற்க திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பிரியங்கா இன்று வயநாடு தொகுதியில் உள்ள கல்பெட்டா பகுதியில் தனது சகோதரர் ராகுல்காந்தி எம்.பி.யுடன் ரோடு-ஷோ நடத்தினார். அவருடன் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் பங்கேற்றனர். அவர்கள் கல்பெட்டா பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1.4 கிலோ மீட்டர் தூரம் திறந்தவெளி வாகனத்தில் ரோடு-ஷோ நடத்தினார்கள். அவர்கள் சென்ற சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உற்சாகமாக கைகளை அசைத்தனர். ரோடு-ஷோ நிறைவடைந்த இடத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடம் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி முன்னிலையில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரியங்கா காந்தி இன்று டெல்லிக்கு செல்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்துக்காக அடுத்த வாரம் வயநாட்டிற்கு மீண்டும் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story