வீடுகள் எரிப்பு, ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களை அளியுங்கள்: மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
supreme court
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக வாழும் மெய்தி இனத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு மே மாதம், மணிப்பூரில் உள்ள மலை மாவட்டங்களில் பழங்குடியினர் ஆதரவு பேரணி நடந்தது. அப்போது, மெய்தி இனத்தினருக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. மாதக்கணக்கில் நீடித்த கலவரத்தில் 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கினர். எண்ணற்ற வீடுகள் எரிக்கப்பட்டன. கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. இன்னும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகளை கொண்ட குழு அமைக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மணிப்பூர் இனக்கலவரத்தின்போது, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எரிக்கப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள் பற்றிய விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கலவரக்காரர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தெரிவிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 20-ந் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.