டெல்லியில் மாணவர்கள் 24 மணி நேரமாக போராட்டம்!
போராட்டம்
டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் 3 பேர் மழைநீரில் மூழ்கி உயிரிழந்ததை கண்டித்து சக மாணவர்கள் 24 மணி நேரமாக போராட்டம்.
கடந்த சில நாட்களாக டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள பிரபல தனியார் யு.பி.எஸ்.சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) நீர் புகுந்துள்ளது. இது தொடர்பாக இரவு 7 மணி அளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி மையத்தில் புகுந்த நீரை மோட்டர் மூலம் உறிஞ்சு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.வெள்ளம் சூழும் முன்பே அங்கிருந்த 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் வெளியேறி உள்ளனர். 3 பேர் உள்ளே சிக்கியிருந்தனர். கிட்டத்தட்ட 10-12 அடி தண்ணீர் சூழ்ந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரத்திற்கு போர்க்களம் போல் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த துணை காவல் ஆணையர் ஹர்சவர்தன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும், டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கீழ்த்தளங்களில் செயல்பட்ட 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.