பெண்ணின் 'சடலத்துடன்' உடலுறவு கொள்வது சட்டப்படி பாலியல் வன்கொடுமை கிடையாது: உச்சநீதிமன்றம்

supreme court
இறந்தவரின் உடலுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சடலத்துடன் உடலுறவு கொள்ளும் தன்மைக்கு நெக்ரோபிலியா என்பது அறிவியல் பெயர். கொலை செய்யப்பட்ட பிறகு இறந்தவரின் உடலுடன் குற்றம் சாட்டப்பட்டவர் உடலுறவு கொண்ட வழக்கு ஒன்றில் நெக்ரோபிலியா குற்றமாகாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் , 21 வயது பெண்ணை கொலை செய்து சடலத்துடன் பாலியல் உறவு கொண்டதற்காக கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி. வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, கைது செய்யப்பட்டவர் மீதான கொலை குற்றத்தை உறுதி செய்தது. ஆனால் சடலத்துடன் உடலுறவு கொண்டதற்காக பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. ஒரு பெண்ணின் இறந்த உடலுடன் உறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 இன் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று விளக்கமளிக்கப்பட்டது. சடலத்துடன் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியாவைத் தவிர வேறில்லை. நெக்ரோபிலியா என்பது ஒரு "மனநலப் பாலியல் கோளாறு" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும் நெக்ரோபிலியாவை தண்டிக்கும் சட்டங்களை பாராளுமன்றம் இயற்ற வேண்டியதன் அவசியத்தையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். பாலியல் குற்றத்தை ரத்து செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாலியல் வன்கொடுமைக்கான வரையறையின் 7வது விளக்கத்தின் கீழ், ஒரு பெண் சம்மதத்தைத் தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் நடக்கும் உடலுறவு வன்கொடுமையாகக் கருதப்படும். இங்கேயும் இறந்த உடலால் சம்மதம் தெரிவிக்க முடியாது, எனவே இதை வன்கொடுமையாக பாவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பு வாதிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நெக்ரோபிலியா ஐ.பி.சி. தன்னடனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமல்ல என்றும், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்றும் தீர்ப்பளித்தது.
