சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய மக்கள் ஆயத்தமாகி விட்டனர். பஸ், ரெயில்கள் நிரம்பி விட்டதால் அரசு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வெளியூர் பயணம் 28-ந்தேதி முதல் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொந்தமாக கார்களிலும் பயணம் செய்கிறார்கள். சென்னையில் இருந்து 29,30-ந் தேதிகளில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும். மேலும் சிறப்பு பஸ்களும் ஆயிரக்கணக்கில் இயக்கப்படுவதால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள். பாஸ்ட் டிராக் கட்டண முறை இருந்தாலும் பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது. அதனை கருத்தில் கொண்டு வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கவும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர். பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தியது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டு திரும்பும் போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பல மைல் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் எனவும், சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.