பாகிஸ்தானி' என அழைப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம்
ஜார்கண்டில் காஸ் (Chas) பகுதியில் துணை கொட்ட அலுவலகத்தில் உருது மொழிபெயர்ப்பாளராகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களை நிர்வகிக்கும் கிளார்க்காக இஸ்லாமியர் ஒருவர் பணியாற்றி வந்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்த நபர் ஒருவருக்கு தகவலை அளிக்கும் பொருட்டு கிளார்க் சென்றுள்ளார். முதலில் போஸ்ட் மூலம் தகவல் அனுப்பப்பட்டபோது, அதில் குளறுபடிகள் நடந்தாக மனுதாரர் மேல் முறையீடு செய்ததால் கிளார்க்கை நேராக சென்று ஆவணங்களை வழங்கும்படி நிர்வாகம் பணித்தது. எனவே மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் கடந்த 2020 நவம்பரில் மனுதாரரை நேரடியாக கிளார்க் சந்தித்து ஆவணங்களை அளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து கிளார்க் உடன் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இஸ்லாமியரான கிளார்க்கை அந்த நபர் மத அடையாளத்தைக் குறிப்பிட்டு 'மியான் - தியான்' என்றும் 'பாகிஸ்தானி' என்றும் கூறியுள்ளார். இது தனது மத உணர்வுகளை புண்படுத்தி தன்னை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறி கிளார்க் மேலதிகாரிகளிடம் முறையிட்டார். தொடர்ந்து அதிகாரியை அவமதித்த மனுதாரர் மீது போலீசில் எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், பிரிவு 298 (மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல்), பிரிவு 504 (அமைதியைக் குலைக்கும் உள்நோக்கத்துடன் ஒருவரை அவமானப்படுத்துதல்) பிரிவு 353 (அரசு அதிகாரியிடம் அத்துமீறல்) ஆகியவற்றின்கீழ் அந்த நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அந்த நபர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அனால் 2023இல் உயர்நீதிமன்றம் அவரின் மனுவை நிராகரித்தது. தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்ற நீதிபதிகள், பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ஒருவரை 'மியான் - தியான்', 'பாகிஸ்தானி' என்று அழைப்பது ரசிக்கக்கூடியதாக இல்லாமல் (poor taste) இருக்கலாம். ஆனால் அது மத உணர்வுகளை புண்படுத்தும் சட்டப்பிரிவு 298 கீழ்வரும் குற்றமாகாது என்று கூறி கிளார்க்கிடம் மத ரீதியாக பேசிய நபரின் மீதான குற்ற வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.