சபரிமலையில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; ரூ.297 கோடி வருமானம்: தேவசம்போர்டு சார்பில் மூலிகை கலந்த குடிநீர் விநியோகம்!!
Sabarimala Ayyappan temple
மகரவிளக்கு சீசன் என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று நடை திறந்த சில மணி நேரங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே தண்ணீர் மூலம் பரவும் தொற்றுநோயை தடுக்கும் வகையில் தேவசம்போர்டு சார்பில் மூலிகை கலந்த குடிநீர் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று மட்டும் சபரிமலையில் 92, 000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மண்டல காலத்தில் சபரிமலை கோயிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.214.82 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில் இவ்வாண்டு கூடுதலாக ரூ.82.23 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரவண பிரசாத விற்பனை மூலம்தான் அதிகமாக ரூ.124 கோடி கிடைத்துள்ளது. காணிக்கை மூலம் ரூ.80.25 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13.24 கோடி அதிகமாகும் என அவர் கூறியுள்ளார். மகரவிளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளோடு தேவசம்போர்டு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.