கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை!!
Yellow Alert
தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கேரளாவில் மழை பெய்து வருகிறது. அங்கு நாளை (27-ந்தேதி) வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் பத்தினம்திட்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை (27-ந்தேதி) திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, கொல்லம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்கு "மஞ்சள் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் ஆற்று பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சுற்றுலா தலங்களுக்கு செல்வதையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். முக்கியமாக பொன்முடி, கல்லாறு, மாங்கயம் ஆகிய இடங்களில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சில இடங்களில் பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.