கலைஞருக்கு கட்டப்படும் பகுத்தறிவாலயக் கட்டிடத்தைச் சுற்றி சாக்கடை மண்

கலைஞருக்கு கட்டப்படும்  பகுத்தறிவாலயக் கட்டிடத்தைச் சுற்றி சாக்கடை மண்

சாக்கடை மண்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிக்காட்டில் அருந்ததியர் தெருவில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அருந்ததியருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கினார். இதையொட்டி அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக குச்சிக்காட்டை சேர்ந்த அருந்ததியர் சமூகத்தினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கலைஞர் பகுத்தறிவாலயம் என்ற பெயரில் கட்டடம் கட்ட முடிவு செய்தனர்.

இந்த கட்டிடம் கட்டுவதற்கான நிதி அருந்ததியர் சமூக மக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் திரட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக, 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள நிலத்தை விலைக்கு வாங்கி அதில் ரூ.30 லட்சம் மதிப்பில் கலைஞருக்கு பகுத்தறிவாலயம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

இங்கு, கலைஞரின் திருவுருவச் சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் முன்னேற்ற பேரவை அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த பகுத்தறிவாலயத்திற்கு தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறாமல் நின்றது. இந்நிலையில் கட்டிடத்தைச் சுற்றிலும் மண்கொட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்காக பாதாள சாக்கடை கட்டுவதற்காக தோண்டிய மண்ணை கொண்டுவந்து கொட்டப்படுவதாக குச்சிக்காடு பகுதி அருந்ததியர் சமூக மக்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது இந்த குச்சிக்காடு பகுதியில் உள்ள அருந்ததியர் சமூக மக்கள் வாழும் இந்த இடத்திற்கு அருகில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. மேலும் இங்கே சாக்கடை கழிவுநீர் மண்ணை வந்து கொட்டுவதால் துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும் மக்கள் கருதுகின்றனர். எனவே உடனடியாக இங்கே கொட்டப்பட்டுள்ள இந்த சாக்கடை கழிவு நீர் மண்ணை அகற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதில் திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் சிலர் வசூல் செய்து நிதி திரட்டி விரைவில் இப்ப பணியை முடிப்பார்கள் என தெரிவித்திருந்த நிலையில் இப்பணி பாதியில் நின்றதும் தொடர்ந்து தற்போது இது போன்ற சாக்கடை மண்ணைக் கொண்டு வந்து கொட்டி அவருக்கு கட்டிடம் கட்டுவதற்காக முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக பொறுப்பு வகித்த கலைஞருக்கு சாக்கடை மண்ணில் கட்டிடம் கட்டுவதா என அருந்ததியர் சமூகத்தினர், நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அவசர, அவசரமாக பாதாள சாக்கடை மண்ணைக் கொட்டி பணிகளை முடிக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story