குழாய் பதிக்கும் பணியில் அதிகாரிகள் மெத்தனம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் சக்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து ஊராட்சி தோப்பு வளவு பகுதியில் கடந்த மழைக் காலத்தின் போது குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குழாய்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி ஏரி பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிவுறுத்தி இருந்தார்.
வரும் மழைக் காலத்தை எதிர் கொள்ளும் வகையில் அந்தப் பணிகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்த போது, கடந்த ஒன்றரை வருடங்களாக மழை நீர் வடிகால் அமைக்காத ஒன்றிய நிர்வாகம் எந்த வேலையும் நடக்காமல் இருந்ததால் கோபமடைந்த எம்.எல்.ஏ ஈஸ்வரன் உதவி பொறியாளர் ஆனந்தியிடம் கடிந்து கொண்டார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விரைவில் பணிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
தனியார் நிலத்தின் வழியாக குழாய் பதித்து தண்ணீரை வெளியேற்ற அனுமதி பெற்றுக் கொடுத்தும் குழாய்களைப் பதிக்காமல் குழி தோண்டிய படியே இருப்பதால் குழி மூடும் அபாயம் உள்ளது. விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். அடுத்த மழைக்காலம் வரும் போது பொதுமக்களை திருமண மண்டபத்தில் தங்க வைக்கும் நிலை வரக்கூடாது. மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளீர்கள். அடுத்த முறை மாவட்ட ஆட்சியரையே அழைத்து வந்து நேரில் காண்பித்து நடவடிக்கை எடுக்க வைப்பேன் என அதிகாரிகளை எம் எல் ஏ ஈஸ்வரன் எச்சரித்தார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், மலர்விழி, ஊராட்சி செயலாளர் சௌந்தர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்ட தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் கொங்கு கோமகன், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.