தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம்

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம்

போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதால், ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் உள்ள உபகரணங்களை, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்த பணியாளர்கள், இன்று முதல் காலவரையற்ற தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன், டாக்பியா மாவட்ட தலைவர் சிவசங்கரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில், 169 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில், பல்நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என, கூட்டுறவு துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதுஆனால், தற்போது, நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு, விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்கள் வாங்க நிர்ப்பந்திக்கின்றனர். அதனால், சங்கங்கள் மேலும் நஷ்டத்துக்கு உள்ளாகி, நிதிநிலை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும்.

இந்த கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், அக். 3 ல், ஏற்கனவே வங்கியில் உள்ள உபகரணங்களை, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, அனைத்து பணியாளர்களும் காலவரையற்ற தொடர் விடுப்பில் செல்லும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தோம்.

ஆனால், கூட்டுறவு துறை அதிகாரிகள் எங்களின் கோரிக்கை குறித்து எவ்வித உறுதியும் அளிக்கவில்லை. அதையடுத்து, கூட்டுறவு துறை அதிகாரிகளைக் கண்டித்து, முன்பு அறிவித்தபடி, மாநிலம் முழுவதும், வங்கியில் உள்ள உபகரணங்களை ஒப்படைப்பு செய்துள்ளோம். மேலும், வங்கி செயலாளர்கள், பணியாளர்கள் இன்று முதல், காலவரையற்ற தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டம், மாநிலம் முழுவதும் தொடர்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் சரகத்தில் 104 கூட்டுறவு கடன் சங்கங்கள், திருச்செங்கோடு சரகத்தில், 65 என மொத்தம், 169 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில், நாமக்கல்லில், 39, திருச்செங்கோட்டில் 9 என, மொத்தம் 48 சங்கங்கள் திறந்துள்ளன. மீதமுள்ள சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மொத்த பணியாளர்கள், 471 பேரில், 114 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 345 பேர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story