காவிரி - திருமணி முத்தாறு - சரபங்கா நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

காவிரி - திருமணி முத்தாறு - சரபங்கா நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

கோரிக்கை

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி - திருமணி முத்தாறு - சரபங்கா நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாமக்கல்லில் நடைபெற்ற சனாதன தர்ம விளக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சனாதன தர்மம் அல்லது நிலையான தத்துவ ஞானம், இசைவு, நம்பிக்கை என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்து வந்த பெயராகும். சனாதனம் என்பது இந்துக்களின் நம்பிக்கை, மனிதர்களின் கடமைகள் என்று இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும், அது சாதிய பாகுபாடு என்று தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் பொது வெளியில் பேசி வருகின்றனர்.

இது குறித்து இன்னும் பலருக்கு போதுமான புரிதல் இல்லாமல் உள்ளதால் சனாதனத்தின் பொருள் குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு இந்து தர்ம சக்தி அமைப்பின் சார்பில் சனாதன தர்ம விளக்க மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. இந்து தர்ம சக்தி மாநில தலைவர் டாக்டர் நித்ய சர்வானந்தா மாநாட்டிற்கு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜவகர்பாபு, பொதுச்செயலாளர் தேவசேனாபதி, பொருளாளர் முருகானந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதன தர்மம் என்ற தலைப்பிலும், தேசிய சிந்தனைப் பேரவை தலைவர் திருநாவுக்கரசு சனாதனம் வளர்த்த சான்றோர்கள் என்ற தலைப்பிலும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் சனாதன தர்மத்தில் அரசியல் மாண்பு என்ற தலைப்பிலும் பேசினர்.

கூட்டத்தில் இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே கோட்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை, அவர்களே நடத்தி வருகின்றனர். இந்து கோயில்களை மட்டும் அரசாங்கம் நடத்துவது முறையல்ல. எனவே இந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தியா ஒரே நாடு என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை உண்டு. எனவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை அனைவரும் வரவேற்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. எனவே விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும் வகையில் காவிரி - திருமணி முத்தாறு - சரபங்கா நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவில் நிறைவேற்றவேண்டும். தமிழகத்தின் கல்வித்தரம் உயர மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

புதுடெல்லியில் புதிய பார்லிமெண்ட் கட்டிடத்தை கட்டி அதில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க செங்கோலை அமைத்தும், ஜி20 உச்சி மாநாட்டு மண்டபத்திற்கு பாரதி மணி மண்டபம் என பெயர் சூட்டியும், மண்டபத்தின் முன்புறம் 25 அடி உயர நடராஜர் சிலை அமைத்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story