அனுமதி இல்லாமல் செயல்படும் கல்குவாரிகளைமூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

அனுமதி இல்லாமல் செயல்படும் கல்குவாரிகளைமூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டம்

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம், எளையம்பாளையம் கிராமத்தில் கிராம ஊராட்சியிலும் - தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகத்திலும் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் சட்ட விரோத கல் குவாரிகள், கிரசர் ஆலைகள், எம்சாண்ட் ஆலைகள் ஆகியவற்றின் அனுமதியை ரத்து செய்து தடை செய்ய வேண்டும், அனுமதியில்லாத கல்குவாரிகளுக்கு வெடி மருந்து கிடைத்தது எப்படி என காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்ட 150 பேர்

உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்திற்கு விவசாயி பழனிவேல் தலைமை வகித்தார். சுற்றுசூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு புறநகர் மாவட்ட செயலாளர் பெரிய சாமி, எலச்சிபாளையம் ஒன்றிய கொமதேக செயலாளர் சுப்பிரமணி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் கூறியதாவது:

கோக்கலை எளையாம் பாளையம் பகுதியில் 2 கிரஷர்கள், 5 எம் சாண்ட் ஆலைகள் அரசு அனுமதி யில்லாமல் இயங்கி வருகிறது. மேலும் ஊராட்சி சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த இயங்காத கல்குவாரிகள் என கூறப்படும் குவாரிகளுக்கு பாறைகளை உடைக்க மருந்துகள் சட்டவிரோதமாக எப்படி கிடைக்கிறது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

குவாரி உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து அமைதியாக அறவழியில் தங்களது சொந்த நிலத்தில் கொட்டகை அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவது நியாயமற்றது.

உடனடியாக கல்குவாரிகள் இயங்குவதைத் தடை செய்ய வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலும் கல் எடுத்து 500 மீட்டருக்குள் வீடு இருந்தால் கிரஷர்கள் அமைக்க கூடாது, 300 மீட்டர்களுக்குள் வீடுகள் இருந்தால் குடியிருப்புகள் இருந்தால் எம் சாண்ட் ஆலைகள் அமைக்கக் கூடாது என்றிருக்கும் சட்ட விதிமுறைகளை மீறி இயங்கும் இந்த கல்குவாரி எம்சாண்ட் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி அற வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

எங்களை மிரட்டும் வகையில் காவல்துறை நடந்து கொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என கூறினார்.

Tags

Next Story