தலைமலை கோவிலில் ஹெலிபேட் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் மனு
நாமக்கல் மாவட்ட தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாகி ராஜேஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் நாமக்கல் மாவட்டம் மோகனுார் தாலுகா, வடவத்துார் ஊராட்சியில் தலைமலை காப்புக்காடு அமைந்துள்ளது. 845 மீ., உயரத்தில் உள்ள இம்மலையில், சஞ்சீவிராய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 6ம் நுாற்றாண்டில், பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த தலைமலையை சுற்றி, 27 கி.மீ., துாரத்துக்கு, தலைமலை சேவா டிரஸ்ட் மூலம், கிரிவல பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய, 40 அடி கிரிவல சாலையாக அமைக்க, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கிரிவல சாலை பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும், தலைமலையில், ‘ஹெலிபேட்’ தளம் அமைக்க ஒப்புதல் அளித்து, விரைந்து செயல்படுத்த தலைமலை சேவா டிரஸ்ட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும்,
அனைத்து மலைப்பாதைகளில், சூரிய ஒளி மின் வசதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும், அனைத்து மலைப்பாதைகளில், கழிப்பிட வசதியுடன் கூடிய நிழற்கூடம் அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்,
மலை உச்சிக்கு நடந்து வரும் பக்தர்களுக்கு, கருப்பண்ணார் சுவாமி கோவில் அருகில், அன்னதானம் மற்றும் துாய குடிநீர் இலவசமாக வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி, கிரிவலப் பாதையை, 40 அடி அகலத்திற்கு, 27 கி.மீ. துாரம் கிரிவல சாலை பணிகளை மேற்கொள்வதற்கும், தலைமையில் ‘ஹெலிபேட்’ அமைக்க தேவைப்படும் காப்புகாடு நிலத்திற்கு ஈடாக, தலைமலைக்கு அருகில், முட்டாஞ்செட்டி கிராமத்தில் உள்ள வருவாய் கரடு நிலப்பரப்பு, 159 எக்டேர் நொச்சிக் கரடை ஈடுசெய்யும் நிலமாக வனத்துறைக்கு ஒதுக்கித்தந்து நில பரிமாற்றம் செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக மனு அளித்தவர்கள் கூறினர்.