ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் பல்லக்காபாளையம்,குமாரபாளையம், வெப்படை, நாமகிரிப்பேட்டை, தட்டாங்குட்டை ஊராட்சி ,உள்ளிட்ட ஐந்து இடங்களில், 100 நாள் வேலை திட்டத்தை சீரழிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று மாதங்களாக நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படாத சம்பளத்தை தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் உடனே வழங்க வேண்டும். காலதாமதமாக வழங்கப்படும் சம்பளத்திற்கு சட்டப்படி வட்டியும் சேர்த்து வழங்கப்பட வேண்டும்.
ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதாக குமாரபாளையம் தாலுகா வட்டாட்சியர் வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி ஆயக்கவுண்டம்பாளையத்தில் 27 பேர், பல்லக்காபாளையம் 31 பேர், மஞ்சு பாளையம் பகுதியில் 34 பேர் என்ற வகையில் வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பல்லக்காபாளையத்தில் ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி தலைமையிலும், குமாரபாளையத்தில் ஒன்றிய செயலாளர் குருசாமி தலைமையிலும், தட்டாங்குட்டை ஊராட்சியில் பி.குமார் தலைமையிலும், வெப்படை நால் ரோட்டில் ஒன்றிய தலைவர் வி.சண்முகம் தலைமையிலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் மாவட்ட தலைவர் சி.துரைசாமி, ஒன்றிய உப தலைவர் எம்.நடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள் .
இதே கோரிக்கைகளுக்காக நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மாநில குழு உறுப்பினர் பி.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி, தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்பண்ணன், சண்முகம் , முனுசாமி, முருகேஷ், சின்னத்தாயி, உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.