சேலம் : ஆளுநரை கண்டித்து பேனா அனுப்பும் போராட்டம்..!
ஆளுநரைக் கண்டித்து சேலத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்தது. இந்த நிலையில் அதற்கான ஒப்புதலில் தமிழக ஆளுநர் கையெழுத்து இடாததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பில் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள தபால் நிலையத்தில் ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசின் சார்பில் கௌரவிக்கப்பட்ட தகைசால் தமிழர் விருது பெற்ற நூறு ஆண்டு கடந்து வாழும் என்.சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் 22ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். மேலும் அதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டி உள்ளதால் அவருக்கு அனுப்பி வைத்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்துள்ளார்.
இதனை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பில் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள தபால் நிலையத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது தலைமையில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் தமிழக ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தபால் தபால் நிலையத்தில் கவர்னருக்கு பேனா அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து இதுபோன்ற இழிவான செயல்களை தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி செய்து வருவதாகவும், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தலைவர் அருண்குமார், செயலாளர் பவித்ரன், மாநில குழு உறுப்பினர் ரம்யா உள்ளிட்டு எண்ணற்ற மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.