திருவண்ணாமலை கோபுரத்தை மறைத்து கோயில் சார்பில் வணிக வளாகம்

திருவண்ணாமலை கோபுரத்தை மறைத்து கோயில் சார்பில் வணிக வளாகம்

கண்டன ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், ராஜ கோபுரத்தை வழிபட முடியாத அளவிற்கு இடையூறாக, வணிக வளாகம் கட்டும் பணிக்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்புகள் போராட தயாராகி வருகின்றன. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர்.

கோயிலில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள, ராஜகோபுரம், 11 நிலைகளுடன், 217 அடி உயரம் கொண்டது. 'கோபுர தரிசனம், கோடி புண்ணியம்' என்பதால், 20 கி.மீ., துாரம் வரை தெரியும். கோயிலுக்கு தினமும் வர முடியாத பக்தர்கள் மற்றும் 20 கி.மீ., துார கிராமங்களில் உள்ள பக்தர்கள் தினமும் காலையில் எழுந்து, ராஜகோபுரத்தை கை கூப்பி வணங்கி பணியை தொடங்குவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், 8 அடி உயரத்தில் ராஜகோபுரங்கள் மறைக்காத அளவிற்கு, 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்காக கடைகள் கட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் வாடகை விடப்பட்டன.

இந்நிலையில் அக்கடைகளை இடித்து விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 30 அடி முதல், 40 அடி வரை உயரத்திற்கு, 3 மாடி அளவிற்கு, 6.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுதவற்கான பணியை, கடந்த மாதம், 20 ம் தேதி அமைச்சர் வேலு, கால்கோள் விழாவுடன் தொடங்கி வைத்தார். தற்போது வணிக வளாகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வணிக வளாகம் கட்டினால், கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு, பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.இதற்கு பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், வணிக வளாக கட்டடத்தின் 'ப்ளூ பிரிண்ட்' எனப்படும், மாதிரி கட்டட அமைப்பை, கோயில் நிர்வாகம் வெளியிடாமல், மூடி மறைத்து வருகிறது.

கோயில் வழிபாட்டு தலத்தை வணிக வளாகமாக மாற்றும் செயலால், பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ஹிந்து அமைப்புகள் கோயில் நிர்வாக செயல்பாட்டை கண்டித்து, போராட்டங்கள் நடத்த தயாராகி வருகின்றன. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் முன்பு இரண்டு அடுக்கு வணிக வளாகத்தை கட்ட இருப்பதை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று அண்ணா சிலை அருகில் நடைபெற இருந்த நிலையில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஆன்மீக மற்றும் கோவில் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஆர் .நாச்சியப்பன் கலந்து கொள்ள இருந்த நிலையில்

அவர் வருவதற்கு முன்பாகவே அனுமதி மறுக்கப்பட்டு அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்து காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் அடிப்படை வசதி இல்லாத திருமணம் மண்டபத்தில் பிரித்து அடைத்து வைத்ததாக கூறியும் வந்த நிர்வாகிகளை மிரட்டி வாகனங்களை திருப்பி விட்டதாகவும் கூறி கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் தனியார் திருமண மண்டபத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

Tags

Next Story