ராசிபுரம் பகுதியில் விபத்துகளை தவிர்க்க ரோட்டரி சங்கம் சார்பில் குவிகண்ணாடி திறப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் நகரைச் சுற்றி 21 இடங்களில் விபத்துகளை தவிர்க்க கான்வெக்ஸ் மிர்ரர் எனப்படும் குவிகண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.
ராசிபுரம் ரோட்டரி சங்கம் கல்வி, சுகாதாரம் மேம்பாட்டு பணிகளுக்கும், சமுதாய முன்னேற்றம், பொதுமக்கள், மகளிர் முன்னேற்றத்திற்கும் பல்வேறு சேவை திட்டங்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராசிபுரம் ரோட்டரி சங்கம் விபத்துக்களை தவிர்க்க சாலை சந்திப்புகளில் நகரைச் சுற்றி குவி கண்ணாடி அமைத்துள்ளது.
ராசிபுரம் பழைய பஸ் நிலையம், ஆண்டகளூர்கேட், ஏடிசி டெப்போ, ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு, காஞ்சி சூப்பர் மார்கெட் சந்திப்பு, ஆட்டையாம்பட்டி சாலை சந்திப்பு, தேங்கல்பாளையம் சாலை சந்திப்பு, சேந்தமங்கலம் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த குவி இக்கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பயன்பாட்டு தொடக்க விழா டிவிஎஸ் சாலை சந்திப்பில் நடைபெற்றது. இதில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.அனந்தகுமார் வரவேற்றார். இதில் ராசிபுரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.ஜெயசங்கரன்,
உதவி ஆய்வாளர் கே.நடராஜன் ஆகியோர் பயன்பாட்டை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் முன்னாள் உதவி ஆளுநர் எஸ்.சத்தியமூர்த்தி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் எல்.சிவக்குமார், எஸ்.கதிரேசன், நிர்வாகிகள் இ.என்.சுரேந்திரன், ஜி.தினகர், ராமசாமி, முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.