பட்டுக்கோட்டை வட்டார ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண்கருவி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "நிலக்கடலை, மக்காச்சோளம் நெல் மற்றும் பயறு வகை பயிர்களுக்கு விதைக் கலப்பை இயந்திரத்தின் மூலம், விதை விதைக்கும் கருவியானது வேளாண்மை துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்பட இருக்கிறது. அந்த இயந்திரத்தின் முழு விலை ரூ 87,181 ஆகும்.
மானியம் ரூ 23,100 போக, விவசாயி பங்கு தொகை ரூ 64,081 ஆகும். மானியம் போக விவசாயின் பங்கு தொகையை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். இந்த விதை உருளை கருவியானது, விதைகளை சீராக விதைப்பதற்கும், குறிப்பிட்ட ஆழத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் விதைகளை விதைப்பதற்கும் பயன்படுகிறது.
இக்கருவினை கொண்டு விதைகள் விதைப்பதனால் அனைத்து பயிர்களும் நல்ல நிலையில் முளைப்புத்திறன் பெறுகிறது. களையெடுக்க நீர் பாய்ச்ச அனைத்திற்கும் மிக வசதியாக உள்ளது. பயிர் பராமரிப்பது மிக வசதியாக உள்ளதால் பயிர் மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது.
எனவே, பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சார்ந்த ஆதிதிராவிட வகுப்பு விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி, மானியத்தில் வழங்கப்படும் விதைப்பு இயந்திரத்தைப் பெற்று பயன் பெறலாம்" என பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.