மெயின் பஜார் வியாபார சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விருதுநகர் மெயின் பஜாரில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு விருதுநகர் மட்டும் இன்றி விருதுநகரை சுற்றியுள்ள கிராமத்தைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், அவ்வாறு வந்து செல்லும் போது மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக காவல்துறையினர் சாலையின் இருபுறமும் கயிறுகளை தடுப்புகளாக வைத்ததாக கூறப்படுகிறது இந்த தடுப்புகளுக்கு உள்ளே தான் இரு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கிய நிலையில், அதை மீறி வெளியே நிறுத்தி இருசக்கர வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த விருதுநகர் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கத்தினர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதை தொடர்ந்து அங்கு வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் நகர மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையை அடுத்து அபராதத்தை ரத்து செய்வதாகவும் கயிறுகளுக்குள் இனிமேல் முறையாக இருசக்கர வாகனத்தை நிறுத்த வேண்டும் என காவல் துறையினர் மற்றும் நகர் மன்ற தலைவர் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.