திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு

அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற‌ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

இதில் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒரு உறுப்பினர் புதுப்பித்தல் பணியினையும், அதேபோல் வாக்குச்சாவடி முகவர்கள், மகளிர் குழு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை அமைக்கின்ற பணியினை வேகமாகவும் விவேகமாகவும், முதன்மையாகவும் அமைக்க அடித்தளமிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்,

இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்று, இதற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற தொடர்ந்து களப்பணி ஆற்றவும், அதனை தொடர்ந்து நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொது தேர்தலிலும் 100% வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும். இந்த தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் திமுக.வின் சுயநலம், குடும்ப நலம் போன்றவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் சுமார் 300 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்கள் நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள், அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றாததை கண்டித்து லால்குடி,

மணப்பாறை, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு, வாகனங்களுக்கான பதிவு கட்டணம் உயர்வு, பால் கட்டணம் உயர்வு என மக்கள் மீது வரிகளை சுமத்தி, மக்கள் விரோத ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின் அரசை அகற்றி மக்களுக்காக ஆட்சி நடத்த எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக களப்பணி ஆற்ற வேண்டும்.

அதிமுகவில் சுமார் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்ததோடு, உள்கட்டமைப்பை தொடர்ந்து வலுவோடு வைக்கும் வகையில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை வாக்குச்சாவடி வாரியாக அமைக்க உத்தரவிட்டு, மாவட்ட பொறுப்பாளர்கள் முதல் பூத் பொறுப்பாளர்களை வரை நியமித்து இயக்கத்தை வீரநடை போட வைக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story